தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வுகள், மருத்துவ தேர்வு போன்றவற்றை இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழியில் எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களின் தாய் மொழியான உருது மொழியிலும் மேற்கண்ட தேர்வுகளை எழுத அனுமதி அளிக்க வேண்டும் என மாணவர் இஸ்லாமிய அமைப்பு என்ற இயக்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நாடு முழுவதும் வரும் ஏழாம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படியும் மனுதாரர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தி உள்ளிட்ட இதர மொழிகளுக்கும் இந்த தேர்வுகளை எழுத மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் உருது மொழியை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியது அரசியலைப்பு சட்டத்துக்கு முரணானதாகும். நாடு தழுவிய அளவில் அதிகமான மக்கள் பேசிவரும் ஆறாவது மொழியான உருதுவை புறக்கணித்துவிட்டு, ஏழாவது மொழியாக உள்ள குஜராத்தியையும், பன்னிரண்டாவது மொழியாக இருக்கும் அசாமி மொழியையும் இணைத்திருப்பது நியாயமற்றதாக உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, உருது மொழியிலும் நீட் தேர்வுகளை எழுதுவதற்கு மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஏற்று கொள்வதாக அறிவித்துள்ள அம்சமும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி பானுமதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக இதை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பான தங்களது நிலைப்பாட்டு என்ன? என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், மத்திய பாடத்திட்ட வாரியம் (CBSE) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி பானுமதி உத்தரவிட்டார். இதையடுத்து, இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.