நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், பகீர் பின்னணி

எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய பிரதமர் மோடியின் கனவு திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து கொள்ள 80% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இறக்குமதி அளவினை 10% குறைக்கவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியா முழுக்க 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.  அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கியது.  ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர்.

இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார்.  இந்நிலையில் உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன?, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன?, ஹைட்ரோ கார்பன் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம். இயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்கும் முறையை ஹைட்ராலிக் ஃபிராக்சூரிங் அல்லது ஃபிராக்கிங் என அழைக்கின்றனர்.  பூமிக்கு அடியில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. இதற்காக பூமிக்கு அடியில் இருக்கும் நீர், மணல் மற்றும் இரசாயனம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.  1940களில் இருந்து ஃபிராக்கிங் வழிமுறை அறியப்படுகிறது. எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே ஃபிராக்கிங் வழிமுறை மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்த வழிமுறை அமெரிக்காவில் மட்டும் அதிக பிரபலமாகியுள்ளது.  இதற்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இயற்கை எரிவாயு ஆதாரங்கள் முற்றிலுமாக வற்றி விட்டதே ஆகும். இத்துடன் இயற்கை எரிவாயு மற்றும் இதர எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.  இதனால் ஃபிராக்கிங் போன்று மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் வழிமுறைகள் அதிக பிரபலமாகி வருகின்றன. இதோடு இவை கவர்ச்சிகரமானதாகவும், லாபகரமானதாகவும் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்த வழிமுறை பத்து லட்சத்திற்க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டு விட்டது.  சுமார் 60% எண்ணெய் வளங்கள் ஃபிராக்கிங் மூலம் துளையிடப்பட்டு பெறப்பட்டுள்ளன. 

ஃபிராக்கிங் எவ்வாறு வேலை செய்கிறது?

முதலில் பூமியினுள் சுமார் 4000 அடி வரை துளையிடப்படுகிறது. பின் குறிப்பிட்ட ஆழத்தில் பாறையில் கிடைமட்டமாக துளையிடப்படுகிறது.  அதன் பின் ஃபிராக்கிங் திரவம் அதிக திறனுள்ள பம்ப்களின் உதவியோடு பாறைகளினுள் பாய்ச்சப்படுகிறது. இந்த திரவத்திற்கு சுமார் 8 மில்லியன் லிட்டர் அளவிலான நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு நீரை சுமார் 65,000 பேர் பயன்படுத்த முடியும். அத்துடன் பல்லாயிரம் டன் மணல் மற்றும் 200,000 லிட்டர் இரசாயனங்கள் தேவைப்படுகிறது. இவை பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட துளையினுள் இருக்கும் பாறைகளில் ஊடுருவி அதிகளவிலான சிறுசிறு விரிசல்களை ஏற்படுத்துகிறது. மணல் இந்த விரிசல்களை மீண்டும் மூடாமல் பார்த்து கொள்கிறது.  மேலும் இரசாயனங்கள் பல்வேறு பணிகளை பாறைகளில் மேற்கொள்கின்றன. மற்ற பணிகளை விட அவை நீரை சுருங்க செய்து, கிருமிகளை அழித்து, கனிமங்களை கலைத்து விடும்.  அடுத்து பெரும்பாலான இரசாயனங்கள் வெளியேற்றப்படுகின்றன.

இதன் பின் இயற்கை எரிவாயுவினை எடுக்க முடியும். இயற்கை எரிவாயுவினை முழுமையாக எடுத்துவிட்ட பின் பூமியினுள் இடப்பட்ட துளை முழுமையாக அடைக்கப்பட்டு விடுகிறது. இத்துடன் மீண்டும் இரசாயனங்கள் செலுத்தப்பட்டு அதன் மூலம் துளையடைக்கப்படுகிறது.  இத்தனையும் மேற்கொள்ளப்பட்ட பின் ஃபிராக்கிங் வழிமுறை பல்வேறு இதர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.  முதலில் ஃபிராக்கிங் மூலம் குடிநீர் மாசுப்படுத்தப்படுகிறது. அதிகளவு சுத்தமான நீரை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி அதே அளவு நீர் மாசுப்படுத்தப்படுவதோடு இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். இவ்வாறு மாசுப்படுத்தப்படும் சுத்தமான குடிநீரை எவ்வித வழிமுறையை கொண்டும் சுத்தம் செய்ய முடியாது.  இது குறித்து முழுமையான தீமைகள் அறிந்த பின்பும் கவனக்குறைவு காரணமாக அமெரிக்காவில் ஏற்கனவே வளங்கள் அனைத்தும் மாசுப்படுத்தப்பட்டு விட்டது. ஃபிராக்கிங் தாக்கம் சார்ந்து தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் எதிர்காலத்தில் இந்த நீர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது. 

ஃபிராக்கிங்கிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளன. இவை மிகவும் அபாயகரமானது முதல் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தது ஆகும். என்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும் சுமார் 700க்கும் அதிகமான வெவ்வேறு இரசாயனங்கள் ஃபிராக்கிங்கில் பயன்படுத்தப்படுகிறது. 

ஃபிராக்கிங்கின் மற்றொரு தீமை இவை வெளியிடும் வாயுக்கள் தான். பெரும்பாலும் இவை மீத்தேன் எனும் வாயுவினை அதிகம் வெளிப்படுத்துகிறது. மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் வாயுவை விட 25% அதிக நச்சு கொண்டதாகும். மேலும் நிலக்கரியை எரிக்கும் போது ஏற்படும் மாசுவை விட இயற்கை எரிவாயில் மாசு குறைவு தான். எனினும் ஃபிராக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும்.  ஃபிராக்கிங் செய்ய அதிகளவு மின்சக்தி தேவைப்படும். அடுத்து பூமிக்கடியில் மேற்கொள்ளப்படும் துளைகள் விரைவில் வற்றி விடும். இதனால் அடிக்கடி துளையிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இத்தகைய வழிமுறைகளுக்கு பின் நமக்கு கிடைக்கும் இயற்கை எரிவாயு உறிஞ்சப்படும் போது 3% வாயு வீணாகி காற்றில் கலக்கிறது.  உண்மையில் ஃபிராக்கிங் செய்யும் போது இன்று நமக்கு பயனளித்தாலும், எதிர்காலத்தில் இது எம்மாதிரியான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதற்கு பதில் இல்லை.