ஜெ.மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மார்ச் 8ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு

ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தக்கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா மறைந்து 90 நாட்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது.  ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கக்கோரி அழுத்தம் அதிகரித்து வருகிறது. சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்போது காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். இதையடுத்து சசிகலா ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஜெயலலிதா மரணம் விவகாரத்தை முழுவதுமாக கையிலெடுத்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கும் சந்தேகம் உள்ளது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 நாட்களும் அவருடன் சசிகலா மட்டுமே இருந்துகொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே சசிகலாவை தமிழக மக்கள் எதிர்க்கவும் காரணமாக உள்ளது. பற்றாக்குறைக்கு மக்கள் மத்தியில் நல்லப் பெயருடன் உள்ள ஓபிஎஸ்க்கு எதிராகவும் சசிகலா குடும்பம் செயல்பட்டு வருகிறது. இது மக்களிடம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் அடித்தளம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமே ஆகும். இந்நிலையில் இதனை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள ஓபிஎஸ் தரப்பு ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு வலியுறுத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த குடியரசு தலைவரிடம் ஓபிஎஸ் தரப்பு அதிமுக எம்பிக்கள் இன்று கோரிக்கை விடுத்தனர். அந்த சூட்டோடு உண்ணாவிரதம் இருக்கவும் ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. ஜெ.மரணத்திற்கு நீதி விசாரனை வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மார்ச் 8 தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உண்ணாவிரதம் தொடர்பாக டிஜிபியிடமும், அந்த மாவட்ட எஸ்.பியிடமும் அனுமதி பெற கட்சி நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.