தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் கேலியாக பார்க்கப்பட்டாலும், அதே நேரத்தில் சாணாக்கியதனமும் நிறைந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக கொதித்தார் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. இதைத் தொடர்ந்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீபா பக்கம் சாய்ந்தனர். இந்நிலையில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற சொலவடைக்கேற்ப பொறுமையாக இருந்த பன்னீர் செல்வம் பொங்கி எழுந்தார். சசிகலாவுக்கு எதிராக புகார் கூறி, தமிழக மக்களின் மனதையும், தொண்டர்கள் ஆதரவையும் தன்வசப்படுத்திக் கொண்டார். இதனால் இரண்டாக பிளவுப்பட்டிருந்த அதிமுக, மூன்றாக துண்டாடப்பட்டது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததை அடுத்து, மெரீனாவுக்குச் சென்ற அதேவளையில் தீபாவையும் சந்தித்தார். அப்போது பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருகரங்களாக செயல்படவுள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.
இது இரு தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய செய்தது என்று நினைத்தால் அது தவறு. ஜெயலலிதா தவறியபிறகு, தீபா வீட்டின் முன்பு கூட்டம் கூட தொடங்கியதும் அரசியலில் நடக்கும் கண்ணாமூச்சிகளை அவர் உள்வாங்கிக் கொண்டிருந்தார். பின்னர் தனக்கு மக்களிடமும், தொண்டர்களிடம் உள்ள ஆதரவை தெரிந்து கொள்வதற்காக கருத்துக் கேட்பு பெட்டி ஒன்றையும் வீட்டு வாசலில் வைத்துள்ளார். அதில் போடப்படும் கடிதங்களில் உள்ள ஆலோசனைகளை படித்துவிட்டு தன் கணவர் மாதவனுடன் ஆலோசனை நடத்துவார். இந்நிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் பொறுப்பேற்றார்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை சசிகலாவுடன் இணைந்து செய்தவர் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக். சசிகலா தன் அம்மா என்றெல்லாம் கூறி வந்தார். இந்நிலையில் தினகரனுக்கு எதிராக தீபக் வியாழக்கிழமை போர்க்கொடி உயர்த்தியதோடு ஓபிஎஸ், தீபா ஆகியோருடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு ஓபிஎஸ்ஸும், தீபாவும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முத்தாய்ப்பாக பன்னீர் செல்வத்தின் அறிவிப்பால் வரலாற்று திருப்புமுனை ஏற்படும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். நேற்று காலை திடீர் பல்டியாக தான் பன்னீர் செல்வத்தின் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று தீபா தெரிவித்தார். சசிக்கு விசுவாசமாக இருந்த தீபக் திடீரென பேட்டி கொடுத்துள்ளது, தன்னை ஆர்.கே. தேர்தலில் போட்டியிட விடாமல் செய்வதற்காக சசி குடும்பத்தினர் தீபக் மூலம் காய் நகர்த்துகின்றனர். பன்னீருடன் இணைந்து செயல்படபோவதில்லை. அவரவர் வழியில் பயணிப்பதே நல்லது. மெரீனாவில் பன்னீரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தீபாவின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது,பன்னீர் அணிக்கு தீபா சென்றால் பன்னீர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும், தீபா இருட்டிப்பு செய்யப்படுவார் என்றும் கட்சியும், ஆட்சியும் தீபாவிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீபா ஆதரவாளர்கள் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓபிஎஸ் அணிக்கு தீபா சென்றால் வழிவழியாக பன்னீரின் ஆதரவாளர்களுக்கு ஆட்சி பதவியும், கட்சிப் பதவியும் சேரும். தீபாவின் ஆதரவாளர்களுக்கு எதுவும் விஞ்சாது என்ற கணக்கு போட்டு தீபாவுக்கு அதுபோன்ற ஆலோசனையை ஆதரவாளர்கள் வழங்கியிருக்கலாம். நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தீபக்கை தனது அணியில் பன்னீர் சேர்த்து கொள்வார் என நினைத்து அதை தீபா விரும்பவில்லை. தீபாவை இணைத்துக் கொள்வது இமேஜை பாதிக்கும்; அவருக்கு அழைப்புவிடுத்துக் கொண்டே ஒதுக்கி வைக்கும் பணியையும் செய்யுங்கள் என்று பன்னீரை, சசிகலாவின் கணவர் நடராஜன் போன் போட்டு உசுப்பிவிட்டது தீபா காதுக்கு எட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பன்னீருடன் தீபா செயல்பட மறுத்ததற்கு காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.