ஜெயலலிதா சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த சீதா என்ற பெண்மணி கைது

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அங்கு டாக்டராக பணியாற்றியதாக சீதா என்பவர் கூறி வந்தார். ஜெயலலிதா மறைவையடுத்து, சில சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், சீதாவை இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக சீதா, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து இதுகுறித்து கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டபோது எந்த நிலையில் வந்தார் என்பது குறித்த சில தகவல்களை தெரிவித்திருந்தார். நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது இருந்த சூழல் குறித்து சில சர்ச்சைக்குறிய கருத்துக்களை அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவுடன் ரத்த உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை. இதில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும் என்றும் சீதா கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கதைு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீதா என்பவர் மருத்துவர் கிடையாது. நியூட்ரிஷியன் படித்து வேலை பார்த்து வந்தார். அவர் அப்பல்லோவில் எந்த பதவியிலும் வேலை பார்த்ததே கிடையாது. பொய் கூறி திரிந்ததால் போலீசில் புகார் கொடுத்தோம் என கூறப்பட்டுள்ளது.