ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது. 

இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் ‘அருவம்’ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது ‘உடல்’ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது” என்றார்.

நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை பற்றி சாய் சேகர் கூறும்போது, “சித்தார்த் மிகச்சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச்சிறப்பாக நடித்து விட்டார். சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோர் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளனர்” என்றார்.

எஸ்.எஸ். தமன் (இசை), என்.கே. எகாம்பரம் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல் (படத்தொகுப்பு), ஜி துரைராஜ் (கலை) மற்றும் ஸ்டண்ட் சில்வா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிகிறார்கள். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.