எடப்பாடி பழனிச்சாமி முதல்வர், ஜீரணிக்க முடியவில்லை.. குஷ்பு ஆதங்கம்

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிடுவார்களா என்று ஊசலாட்டமாக இருந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கிறார். இதனை ஜீரணிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சட்டசபையில் இன்று 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றி பெற செய்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்களை கழுவி கழுவி மக்கள் ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேட்கவே வேண்டாம். காதில் இருந்து ரத்தம் வரும் அளவிற்கு திட்டித் தீர்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் குஷ்பு, ஜோதிமணி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் டுவிட்டரில் திட்டி இருக்கிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் எப்படியோ வாக்களித்து முதல்வர் பதவியை உறுதி படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இதனை ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார் குஷ்பு. “இனியாவது நம் தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளரின் தகுதியைப் பார்த்து வாக்களிப்போம். இல்லாவிட்டால் இதுதான் கதி” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கொந்தளித்துள்ளார். பத்திரிகையாளர் சுதிர், பழனிச்சாமிக்கு ஓட்டு போட்ட எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோபம் குறையும் வரை வெளியே தலை காட்டமாட்டார்கள் என்று நக்கலடித்திருக்கிறார். இன்று சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுந்துள்ளநிலையில் தோஹா டாக்கீஸ் “1991ல் நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது சபாநாயகரின் இருக்கையில் சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா அமர்ந்தார்.

சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா என்பதையும் நினைவு கூற வேண்டியுள்ளது” என்று வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவிடப்பட்டுள்ளது. நாங்க நல்லா பண்ணுறோமோ இல்லையோ நீங்க நல்லா பண்ணுறீங்க என்று பன்னீர் அணியினர் திமுக எம்எல்ஏக்களை பார்த்து சொல்வது போன்று மீம்ஸ்கள் வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.