சில சமயங்களில், இந்திய சினிமா தனது ரசிகர்களுக்கு காலத்தால் அழியாத மாபெரும் படைப்புகளை வழங்கியிருக்கிறது. இதை வெறும் படைப்புகள் என்பதையும் தாண்டி, ‘கிரவுண்ட் பிரேக்கர்ஸ்’ என்றும் கூறலாம். அதாவது இவை சினிமா பார்க்கும் அனுபவத்தையே முற்றிலுமாக புரட்டி போட்டவை. அந்த வகையில், ஒரு சில திரைப்படங்கள் தான் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கும் அதே கொண்டாட்டங்களுடம் கடந்து செல்லும். 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா திரைப்படம் சந்தேகத்திற்கு இடமின்றி மாயாஜாலம் நிகழ்த்தி பல ஆண்டுகளுக்கு அப்பாலும் பரவியுள்ளது, பல கோடி ரசிகர்களின் விருப்ப படமாக இருந்து வருகிறது. “32 YEARS OF MR INDIA” என்ற தலைப்பு சமூக வலைத்தளங்களில், இணைய தளம் மற்றும் மீடியா சேனல்களில் பேசப்பட்டு வருவது படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல், பாலிவுட்டின் முதல் அறிவியல் புனைவு பொழுதுபோக்கு படமான இதை பெரிய திரையில் கண்டு ரசித்த ரசிகர்களுக்கும் பழைய நினைவுகளை தூண்டியுள்ளது.
அருண் பையா, சீமா திதி, குழந்தைகள், காலண்டர், எவர்கிரீன் பாடலான ஹவா ஹவா பாடல், அதன் இசை மற்றும் அதற்கு நடனம் ஆடிய காலத்தால் அழியாத அழகு ராணி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு மற்றும் 90களையும் தாண்டி 2000களின் குழந்தைகளும் ரசிக்கும் ஸ்ரீதேவியின் சார்லி சாப்ளின் ஆகியவற்றை எல்லாம் யாரால் மறக்க முடியும். எல்லாவற்றிற்கும் மிரட்டலான, பயமுறுத்தும் மொகம்போவும், அவர் பேசும் “மொகம்போ குஷு ஹுவா”வை இந்தி தெரியாத மக்களும் வெகுவாக ரசித்தனர். இந்தியாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கபூர் இயக்க, ஒரே படத்தில் எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோவாக மாறிப்போன அனில் கபூர் நாயகனாக நடித்திருந்தார். போனி கபூரின் மிக பிரமாண்டமான தயாரிப்பில் உருவான இந்த படம் யாராலும் மிஞ்ச முடியாத ஒரு தலைசிறந்த படமாக அமைந்தது. கூடுதலாக, சதீஷ் கவுசிக்கின் காலண்டர் கதாபாத்திரம், எடிட்டர் கெய்டனாக அனு கபூரின் பொழுதுபோக்கு பகுதி, லக்ஷ்மிகாந்த் பியாரி லாலின் மெல்லிய மற்றும் மயக்கும் பாடல்கள், சரோஜ் கான் நடனம் மற்றும் சலிம் ஜாவேத் திரைக்கதை படத்தை மேலும் அழகாக்கிய சிறப்பம்சங்களாக இருந்தன.
மிஸ்டர் இந்தியாவின் 32வது பிறந்த தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், படக்குழுவினர் இந்த படத்தின் மறக்க முடியாத தூண்களை நினைவு கூர்கிறார்கள். இது அவர்களின் ஆன்மாவின் அர்ப்பணிப்பு, இது அவர்களை வாழ்கின்ற மக்களின் மனதிலும், நினைவுகளிலும் வாழ செய்கிறது. அந்த வகையில் ஸ்ரீதேவி போனி கபூர் மற்றும் வீரு தேவ்கன் (சண்டைப்பயிற்சி இயக்குனர் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை) ஆகியோரை நினைவு கூர்கிறார்கள்.