குண்டுக்கட்டாக திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்

சட்டப்பேரவை வளாகத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் 20 பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 11 மணிக்குத் தொடங்கியது முதலே ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டதுடன், அவரது இருக்கை மற்றும் மைக் ஆகியவற்றையும் திமுக உறுப்பினர்கள் சேதப்படுத்தினர். இதனையடுத்து சட்டப்பேரவை 1 மணி மற்றும் 3 மணி என அடுத்தடுத்து இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைக்கும் முன்னர், சபை மாண்புகளை குலைக்கும் வகையில் செயல்பட்ட திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவையிலிருந்து வெளியேற மறுத்து அவைக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். இதனால், மா.சுப்ரமணியன், நந்தகுமார், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், உத்திரமேரூர் சுந்தர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும், அவையை விட்டு வெளியேற மறுத்த திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.