அமளி காரணமாக 3 மணி வரை சபை ஒத்திவைப்பு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

முதலமைச்சராக பொறுப்பேற்ற சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனது மெஜாரிட்டியை நிரூபிக்க ஏதுவாக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. 11 மணிக்கு அவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை என்றும், அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறியதால் எம்.எல்.ஏ.க்களின் கோபம் மேலும் அதிகரித்தது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பு உள்ள மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. மைக்குகள் உடைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் சபாநாயகரின் இருக்கை மீது ஏறவும் சில எம்.எல்.ஏ.க்கள் முயன்றனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோதும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக இருந்தனர். இதற்கிடையே, சட்டசபை வளாகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியதையடுத்து, அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமை செயலகம் செல்லும் சாலைகளும் மூடப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஒரு மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, அவையில் தி.மு.க. உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பேசிய சபாநாயகர் தனபால், அவையை நடத்த வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக கூறினார்.  இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முன்மொழிந்தார்.

அப்போதும் தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியடையாமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். சட்டப்பேரவை மாண்புகளை குலைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், வெளியேற மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை சபாநாயகர் இதையடுத்து, அவர்களை சபைக் காவலர்கள் வெளியேற்ற முயன்றனர். தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற மறுத்ததால், காவலர்களுக்கும் அவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் மீண்டும் உடைக்கப்பட்டது. உறுப்பினர்களை வெளியேற்ற முடியாமல் அவைக் காவலர்கள் திணறினர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.