சென்னை கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் இலக்கியா (வயது 14 ) தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட மாணவி இலக்கியா.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்குபெற்றனர் .இதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றப்பட்ட இந்த போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இரு தங்க பதக்கங்களை வென்று வெற்றிபெற்றுள்ளார் மாணவி இலக்கியா.
இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .