சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது

நாளை சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு எதிராக வாக்களிக்க அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருநாவுக்கரசர் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத்தலைவர் ராமசாமி, விஜயதரணி மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை திருநாவுக்கரசர் டிவிட்டரில் தெரிவித்தார். ஏற்கனவே திமுகவும், எடப்பாடியாருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்த நிலையில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் இம்முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறது. இதற்கு வசதியாக சட்டசபை கூட்டம் நாளைக்கு கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் காங். எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும் வாய்ப்பு கூட உண்டு என்பதால் காங்கிரசின் 8 எம்.எல்.ஏக்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் கூட 18 எம்.எல்.ஏக்கள் முரண்டுபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டும் முக்கியம் என்பதால் காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.