இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெலுங்கானா மாநில அரசிடம் இருந்து 2014-ஆம் ஆண்டு பெற்ற ரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கு 14.5 சதவீத சேவை வரியை செலுத்தவில்லை. இதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை கமிஷனர் அலுவலகம் சார்பில் சானியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சானியா தற்போது வெளிநாட்டில் விளையாடி வருவதால் அவரது பிரதிநிதி நேற்று உரிய ஆவணங்களுடன் ஆஜரானார். அப்போது சானியா மிர்சா எந்த வித வரி ஏய்ப்பும் செய்யவில்லை என்று அவர் மறுத்தார். ‘பயிற்சிக்குரிய ஊக்கத்தொகையாக தெலுங்கானா அரசிடம் இருந்து ரூ.1 கோடியை சானியா பெற்றாரே தவிர, தெலுங்கான அரசின் தூதராக நியமிக்கப்பட்டதற்காக அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டது. சேவை வரித்துறையினர், அவர் தாக்கல் செய்த ஆவணங்களை படித்து பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள்.