சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா மூன்றாவது முறையாக நடிக்கும் “ஜாக்பாட்”

சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 

ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் “ஜாக்பாட்”. 

ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல பெயரையும் நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன. அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த “ஜாக்பாட்” படமும் இணையும் என்று தெரிகிறது. சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு  முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்துள்ளது. படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இந்தப்படமும் காமெடியை அடித்தளமாக கொண்டது தான். மேலும் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருப்பதால் நிச்சயம் ஒரு நல்ல மெசேச் இருக்கும் என்றும் நம்பலாம். 

இந்த ‘ ஜாக்பாட் ‘ டிற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.  படத்தின் எடிட்டர் விஜய். இப்படத்தில் இணை தயாரிப்பாளராக இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்துள்ளார்.

இத்திரைப்படம் 2டி எண்டெர்டெயின்மெண்ட்-ன் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.