பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் சுறுசுறு கலகல மெகா அனிமேஷன் தொடர் பொம்மியும் திருக்குறளும்

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கு எத்தனையோ விதமான விளக்க உரைகள், வீடியோக்கள் வந்துவிட்டன. அனிமேஷன் படங்கள் கூட வந்திருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். காரணம், திருக்குறளுக்கு நம்மாலான பங்களிப்பு என்பதோடு அந்த முயற்சிகள் நின்று போனதுதான்.

ஆனால் சன் குழுமத்தின் சுட்டி டிவியுடன் இணைந்து ‘கஸ்டோஸ்’ ஸ்டுடியோஸ் உருவாக்கியுள்ள பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் வந்துள்ளது. தினம் ஒரு திருக்குறள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சாரம். ஆனால் அதை குழந்தைகள் மனதில் எளிதில் பதியும் வகையில் கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் அவருக்கே உரிய எளிய, நகைச்சுவை ததும்பும் நடையில் சொல்வதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். கார்ட்டூன் பாத்திரங்களுடன் இணைந்து திரையில் தோன்றுவது பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு முதல் அனுபவமும்கூட. ராஜா சின்ன ரோஜா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட அனுபவம் மாதிரி.

திருக்குறள் என்றாலே நீதிபோதனை என்ற பலரின் நினைப்பையும் போக்கும் வகையில் கருத்து, கதை, காமெடி அரட்டை அனைத்தையும் கலந்து ஒவ்வொரு குறளையும் 6 நிமிட எபிசோடாகத் தருகிறார்கள்.

பொம்மியும் அவளது நண்பர்களும் கார்ட்டூன் சித்திரங்களாகத் தோன்ற, அவர்களுடன் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுவதுபோல நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒளிபரப்பான ‘பொம்மியும் நண்பர்களும்’ தொடருக்குக் கிடைத்த வெற்றி காரணமாக, அதே பொம்மி மற்றும் அவளது நண்பர்களை வைத்து இந்த திருக்குறள் நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சுட்டி சேனல் குழுமத்தின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் கவிதா ஜாபின் கூறுகையில், “திருக்குறளை ஒரு மனப்பாட செய்யுளாகத்தான் பலரும், குறிப்பாக சிறுவர் சிறுமியர், மாணவர்கள் பார்க்கிறார்கள். இதனை அடுத்த தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் பொம்மியும் திருக்குறளும். தினமும் ஒரு திருக்குறளை அனிமேஷன் முறையில் அனைவரையும் கவரும வகையில் உருவாக்க வேண்டும் என்ற யோசனைக்கு அருமையாக அனிமேஷன் வடிவம் கொடுத்துள்ளனர் ‘கஸ்டோ ஸ்டுடியோ’ நிறுவனத்தினர். இந்த துறையில் கஸ்டோ ஸ்டுடியோ சர்வதேச அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களுடன் இணைந்து இந்த அனிமேஷன் தொடரை உருவாக்கியுள்ளோம். 1333 குறள்களையும் இதே போன்று முழுமையான அனிமேஷன் சித்திரங்களாகத் தரவிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள். திருக்குறளை குழந்தைகள் மேல் திணிக்காமல், ஒரு முறை பார்த்ததுமே, கேட்டதுமே ஆர்வத்துடன் அதைப் புரிந்து கொள்ளும் வகையில் கதை சொல்லும் பாணியில் குறள்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்,” என்றார்.

இந்த தொடருக்கு திரைத் துறையின் ஜாம்பவான்கள் பலரும் பங்களித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கருத்து வடிவமைப்பு: தோட்டா தரணி
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ வில்சன்
பாடல்கள்: பா விஜய்
கருத்துருவாக்கம் – கவிதா ஜாபின் சன் நெட்வொர்க் & கஸ்டோ ஸ்டுடியோ
திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்டோ ஸ்டுடியோ
டைட்டில் பாடல் இசை: டிமோதி மதுகர்

பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நேற்று 29.04.2019-ல் சுட்டி டிவியில் ஒளிபரப்பானது. இந்த முதல் எபிசோடுக்கு குழந்தைகள் மட்டுல்ல, பெரியவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.