சென்னையில் நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.
திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார். மேலும் தமிழ் மன்னர்களின் வரலாற்றையும் சமகால அரசியலையும் பேசக்கூடிய கலையாகவும் மேம்படுத்தி தெருக்கூத்து வடிவில் மக்களிடம் சேர்த்து வருகிறார்..
அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தி இருந்தார்.
தற்போது நந்தி வர்மனின் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி Sunday காலை 10 மணி மற்றும் மாலை 3:30 மணி என இரு காட்சிகளாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், திரைத்துறையினர் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.