டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன்

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

இந்த படத்தில் ஒரு நாய் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த நாய் எப்படி சொல்லிக் கொடுத்த மாதிரி இப்படி நடிக்கிறது என மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

இயக்குனர் விஜய் எனக்கு தலைவா படத்தில் இருந்து நல்ல நண்பர். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ஆஸ்திரேலியாவில் படித்தவர், ஆனாலும் தமிழ் சினிமாவில் சினிமா மீது மிகுந்த காதல் உடையவர். நல்ல நல்ல சினிமாக்களை எடுக்க வேண்டும் என்ற தாகத்தில் சினிமாவுக்கு வந்தவர். சைக்கோ, மாயோன் என அடுத்தடுத்து நல்ல, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குழந்தைகள், குடும்பங்களை மையமாக வைத்து கோடை விடுமுறையில் இந்த வாட்ச்மேன் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தால் யாருக்கும் நஷ்டம் வந்து விடக்கூடாது என்ற நல்ல மனதோடு இருக்கிறார். அவர் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாக அமையும் என்றார் தயாரிப்பாளர் பிடி செல்வக்குமார்.

இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது, இயக்குனர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பல பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் காட்சியை பற்றி ஒரு முறை கேட்பார், நடித்து காட்டுவார். அவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஐதராபாத்தில் 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் சுமன்.

ஒரு இயக்குனருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு 5 ஆண்டுகளாக நண்பர், அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராஜ் அர்ஜூன் தாண்டவம், தலைவா, இந்தியில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தவர். வாட்ச்மேன் படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள். சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, புதுமையாக இருக்கிறது எனக்கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார். ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்றார் இயக்குனர் விஜய்.

நாச்சியார் படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் விஜய் சார் தான். அவருக்கு 9 படங்களில் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிகனாக நடித்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படமாக இருக்கும் என்றார் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார்.