அட்றா ராஜா அடிடா – திரைவிமர்சனம்

நாயகன் ராஜியா கிருஷ்ணா தொப்பை நிறைந்த போக்குவரத்து காவலராக வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி வசூல் வேட்டைகளிலும் ஈடுபடும் இவருக்கு மனைவியாக ஹேமலதாவும், ஒரு மகனும் இருக்கின்றனர். சம்பளத்தை தவிர்த்து அவர் வசூலிக்கும் கிம்பளங்கள் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை.  இதுபோன்ற தவறான வழிகளில் சம்பாதிக்க வேண்டாம் என்று ஹேமலதா பலமுறை கூறியும் ராஜியா வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. ராஜியா தனது மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் ஹேமலதா அதனை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். 

இதுஒருபுறம் இருக்க காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை தனது கையில் போட்டுக் கொள்ளும் பெண் ஒருவர், அந்த அதிகாரியின் பெயரை சொல்லி சில இடங்களில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், போக்குவரத்தை தனது ஸ்டைலில் நடனமாடி சரிசெய்யும் ராஜியாவை பார்க்கும் அந்த பெண்ணுக்கு அவரை பிடித்து போக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.  இந்நிலையில், அந்த வழியாக செல்லும் ஒரு இளைஞனை மடக்கிப் பிடிக்கும் ராஜியா அவனிடம் காசை கறக்க நினைத்து வண்டிக்குரிய ஆவணங்களை சமர்பிக்க கூற, தனது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவரை காப்பாற்ற மருந்து வாங்க அவசரமாக வந்ததால் ஆவணங்களை எடுத்துவரவில்லை என்று கூறுகிறார். அவனது பேச்சை கேட்காமல் அந்த இளைஞனை அனுப்ப மறுப்பதால், அந்த இளைஞனின் தந்தை இறந்துவிடுகிறார். 

இதையடுத்து ராஜியாவை தான் பழிவாங்கியே தீருவேன் என்று அந்த இளைஞன் கூறி செல்கிறார். இந்நிலையில், ராஜியா பணிநீக்கம் செய்யப்படுவதாக அவரது வீட்டுக்கு தபால் வர, இதுகுறித்து ஹேமலதா, ராஜியாவிடம் கூறும் போது அவரது போன் உடைந்து விடுகிறது. இதனால் மனவேதனையில் மது அருந்தும் ராஜியாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறான்.  மகனை இழந்த துக்கத்தில், ராஜியாவால் தான் தனது மகன் இறந்ததாகக் கூறி ஹேமலதா கணவனை விட்டுப் பிரிகிறாள். மகனையும் இழந்து, மனைவியையும் பிரிந்த துக்கத்தில் தனது தவறை ராஜியா உணர்ந்தாரா? மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா? அனைவரையும் ஏமாற்றிய அந்த பெண் ராஜியாவையும் ஏமாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்