காவல்துறை அதிகாரியாக பாபி சிம்ஹா அவரின் நண்பராக சதீஷ். பாபி சிம்ஹாவின் காதலியான ரம்யா நம்பீசன் தனது தோழி பாபி சிம்ஹாவை பேட்டியளிக்க ஏற்பாடு செய்திருந்தார். சரியான நேரத்தில் வராததால் பேட்டி கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
ஆனால் அந்த நேரத்தில் அந்த தோழி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட செய்தி தொலைக்காட்சியில் வருகிறது.
இந்த கொலையில் அவரை ஒருதலையாக காதலிக்கும் காதலர் மாட்டிக்கொள்கிறார். விசாரணையில், பாபி சிம்ஹா, பிடிபட்டவர் கொலையாளி இல்லை என்றும், ஒரு சிறுவன் தான் கொலை செய்தான் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.
மீண்டும் சில இடங்களில் சிறுவர்களால் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். விசாரணையில் முழுமூச்சாக ஈடுபடும் பாபிசிம்ஹா, அதன் பின்னணியில் இருப்பது அரசியல்வாதியான மதுபாலா என்பதையும் கண்டு பிடிக்கிறார்.
மதுபாலா சிறுவர்களை வைத்து கொலை செய்வதற்கான காரணம் என்ன? பாபி சிம்ஹா மதுபாலாவை கைது செய்தாரா? என்பதே அக்னிதேவி படத்தின் மீதிக்கதை.
பாபி சிம்ஹா ஐபிஎஸ் அதிகாரியாக துப்பறியும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அக்னி தேவி கதாபாத்திரத்தில் வில்லி அரசியல்வாதியாக பல உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மதுபாலா.
நாயகி ரம்யா நம்பீசன் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார். சதீஷ், எம்எஸ் பாஸ்கர், லிவிங்ஸ்டன், போஸ்வெங்கட், ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
சுவாதி கொலை என பல உண்மைச் சம்பவங்களை இணைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர். ஒரு கலவரத்தால் எத்தனை பேருடைய வாழ்க்கை திசை மாறுகிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
காதல், பாடல் என எந்த இடையூறும் இல்லாமல் பரபரப்பாக துப்பறியும் காட்சிகள் செல்கிறது.
“அக்னி தேவி” உண்மை அரசியலின் பிரதிபலிப்பு.