அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக முடிந்து, விமல்ராஜ் சிறந்த மாடு பிடி வீரராக தேர்வு

உலகப் பிரச்சித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு உற்சாகமாக இன்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் 11 காளைகளை அடக்கிய விமல்ராஜூக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தடையால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தால் வெகு கோலாகலமாக நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி அவனியாபுரத்திலும், பிப்ரவரி 9ஆம் தேதி பாலமேட்டிலும் நடைபெற்றது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திட்டமிட்டப்படி இன்று காலை தொடங்கி 4.45 மணிவரை நடைபெற்றது. இதில் பதிவு செய்யப்பட்ட 950 காளைகளும், 1650க்கும் மேற்பட்ட மாடுபி்டி வீரர்களும் பங்கேற்றனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து காளைகளும் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டன. அடங்க மறுத்த காளைகள், அடக்கத் துடித்த காளையர்களுக்கும் இடையே சரியான ஆட்டமாக இருந்தது. களத்தில் நடந்த விளையாட்டை இளைஞர்களும், மாணவர்களும் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இதில் பல காளைகள் அடங்க மறுத்து சீறி பாய்ந்தன. திருச்சியைச் சேர்ந்த தொண்டைமான் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்த காளை கார் பரிசாக வென்றது.

கிரிக்கெட் போட்டி போல அதிக காளைகளை வீரத்துடன் தழுவி அடக்கிய விமல்ராஜ் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. விமல்ராஜ் 11 காளைகளை அடக்கினார் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் அறிவித்தார். நாட்டு பசுமாடும் அவருக்கு பரிசளிக்கப்பட்டது. மணிகண்ட பிரபு என்ற வீரர் 10 காளைகளை தழுவினார். 9, 8, 7 காளைகளை தழுவிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர போட்டியில் பங்கேற்ற அத்தனை காளைகளுக்கும் தங்கக் காசு பரிசளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக மு.க.ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். தவிர அண்டா, பட்டுப்புடவை, சைக்கிள், டிராவல் பேக் என பரிசுப்பொருட்களை மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கைநிறைய அள்ளிச்சென்றனர்.  உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இன்றைய போட்டியில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மதுரை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த ஆண்டு மாடுகள் முட்டி காயம் மட்டுமே ஏற்பட்டது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் போராட்டம் நம் பாரம்பரியத்தை காப்பற்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்த போட்டி தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.