“இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” படத்தில் கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகளுக்கு ஏற்றவாறு இசை இருக்கும்

ஒரு பெயர் இசை ரசிகர்களிடத்தில் ஒரு எனர்ஜியை தூண்டும் என்றால் அது இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பெயராக இருக்கும். தமிழ் சினிமா வட்டாரத்தில் மிக வேகமாக ஒரு பிராண்டாக வளர்ந்து வருகிறார். அது மார்ச் 15ஆம் தேதி வெளியாகும் “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” படத்தில் இன்னும் பெரியதாக தயாராக உள்ளது. அவரது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்திருப்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சாம் சிஎஸ்.
மெல்லிசை படத்துக்கு பிறகு ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி உடன் எனது இரண்டாவது படம். முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நான் பணிபுரிவது இதுவே முதல் முறை. என் முந்தைய படங்களில், காதல் என்பது கதையின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்திருகிறது, ஒரே நேரத்தில் கதை பல விஷயங்களை சுற்றி சுழலும். ஒரு ஸ்கிரிப்ட்டின் ஆதாரமாக காதல் என்பது வரும்போது இசையமைக்க அதிக வாய்ப்பு உண்டு.
காதல் கதைகள் பொதுவாக பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். பொதுமக்களிடமிருந்து இந்த ஆல்பத்துக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளேன். அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் தான் தற்போது ரேடியோ தரவரிசை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நான் ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் வரும் யாஞ்சி பாடலில் அனிருத் உடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் பாடிய பிறகு பாடலின் முழு வடிவமும் வேறு விதத்தில் உருமாறியது. அதேபோல் இந்த கண்ணம்மா பாடலும், அவரது குரலில் முற்றிலும் புதிய ஒரு தோற்றத்தை கொடுத்துள்ளது. மேற்கத்திய பாடல்களுக்கு நாம் செவி சாய்த்தாலும், எப்போதும் நமது லோக்கல் குத்துப் பாடல்கள் மீது நீங்காத காதல் உண்டு. அதை இந்த பாடலிலும் சேர்த்து முயற்சி செய்தோம், அது நன்றாக பொருந்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 
நான் இளையராஜாவின் அதிதீவிரமான ஒரு ரசிகன். இந்த படத்திலும் மௌனராகம் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெறும். காதல் படங்களில் எங்கு, எப்போது பாடல் வைக்கப்பட வேண்டும் என்ற ஒரு விதி உண்டு. ஆனால் “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” படத்தில் கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகளுக்கு ஏற்றவாறு இசை இருக்கும். கதாபாத்திரங்கள் வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாத விஷயங்களை இசையால் சொல்ல முயற்சித்திருக்கிறோம், இது மிகவும் சவாலான பணியாக இருந்தது. இளையராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஒரு பாடலையோ அல்லது பின்னணி இசையையோ எங்கு வைக்கக்கூடாது என்பது தான். 
படத்தை ஆத்மார்த்தமாக உணர, நான் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு இசைக்கருவிகளையே பயன்படுத்தி இருக்கிறேன். இந்த படம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நான் நம்புகிறேன். ரஞ்சித் ஜெயக்கொடிக்கும் எனக்கும் ஒத்த சிந்தனை இருக்கிறது. அவர் முதலில் இசையை கேட்பார், அதன்படி காட்சிகளை எழுதுவார். அவருடன் இணைந்து எதிர்காலத்தில் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன், ஏனெனில் ஒருவருக்கொருவர் என்ன தேவை என்பதை இருவரும் எளிதாக புரிந்து கொண்டிருக்கிறோம். 
ஒளிப்பதிவாளர் இந்த படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். நான் முதன்முதலில் அவரை சந்தித்தபோது, அவர் ஒரு உதவி இயக்குனர் என்று நினைத்தேன். 22 வயதே ஆன இளைஞர் என்றாலும் அவரது ஒளிப்பதிவு பெரிய அளவில் பேசும். எதிர்காலத்தில் அவர் பெரிய உயரங்களை தொட வேண்டும் என ஆசைப்படுகிறேன். வாழ்க்கையில் எல்லோருமே காதலை கடந்து வந்திருப்பார்கள், அவர்கள் அனைவருமே இந்த படத்துடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். காதலில் விழுந்த, காதலில் இருக்கின்ற, எதிர்காலத்தில் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் காதலில் விழப்போகும் உங்கள் அனைவரும்.