பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் டுவீட்டிலிருப்பதாவது, “பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்…. நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.