எனது நிறுவனத்தின் சிறந்த படமாக ‘நட்பே துணை’ இருக்கும் – சுந்தர்.சி

இணையதளத்தில் பார்த்த பலரை இன்று நேரில் பார்க்கிறேன்.  ‘எரும சாணி’ விஜய்யை எனக்கு பிடிக்கும். நகைச்சுவையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரை கதாநாயகனாக உருவாகிவிடுவார்கள். சிறிது காலத்திற்கு நகைச்சுவையில் வெற்றி பெற்று, அதன்பிறகு நாயகனாகலாம். 

ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

என் மனைவியிடம் மீசைய முறுக்கு படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு வெளி வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றார். 
கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்.