ஒரு சிலர் ‘ஹீரோ’ மற்றும் ‘ஹீரோயின்’ என்று பெயர் பெறுவதை விட, ஒரு சிறந்த நடிகர்/நடிகை என்ற பெயரை பெறவே விரும்புகிறார்கள். துல்லியமாக, இந்த முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், அவர்களது இலக்குகளை அடைவதற்கு நிறைய சவால்களை அந்த பயணத்தில் சந்திக்க வேண்டி இருக்கும், நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும்.
இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, “பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை” என்கிறார்.
கனா புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் அந்த நடிகை வேறு யாருமல்ல, நன்கு அறியப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் எளிதாக சினிமா கதவுகள் திறந்து விடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் கீர்த்தி விஷயத்தில் அப்படியில்லை. “நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்றார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியன் அவர்களுக்கு விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். சினிமாவுக்குள் நுழைந்தாலும் அவருக்கு மேடை நாடகங்கள் உடன் உள்ள பிணைப்பு குறையாது என்பதில் உறுதியாக இருக்கிறார். “அப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பெரிய மேடை நாடகத்தை தயாரிக்க இருக்கிறேன்” என்கிறார்.
இந்த காமெடி அட்வென்சர் திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். கனா புகழ் தர்ஷன் உடன் இணைந்து விஜய் டிவி தீனாவும் நடிக்கிறார். “ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என அதை பிரித்து பார்க்க நான் விரும்பவில்லை, மூன்று பேரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறோம் என்கிறார் கீர்த்திபாண்டியன். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். இந்த படத்தில் VFX மற்றும் CGI ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.