வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி வனத்துறை பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அச்சமயம் அவ்வழியாக 2 லாரிகள் வந்தன. அதிகாரிகள் லாரியை மறித்து, சோதனை செய்தனர். அதில், பெரிய அளவிலான கிரானைட் கற்கள் இருப்பது தெரிந்தது. இதுபற்றி அதில் வந்த டிரைவர்களிடம் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் யாதமுனியை சேர்ந்த பாபு (37), கிரிம்ஸ் பேட்டையை சேர்ந்த ஜான் பீட்டர் (31) என்பதும் 2 லாரிகளில் 37 டன் கிரானைட் கற்கள் இருப்பதாகவும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை எனவும் தெரிந்தது. மேலும் விசாரணையில், தமிழக – ஆந்திரா மாநில எல்லையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த டி.பி., பாளையம் அருகே உள்ள கிரானைட் மலையில், கிரானைட் கற்களை திருட்டுத்தனமாக வெட்டி, சேலத்துக் கடத்தி சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், கிரானைட் கற்களுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.