ரெயின்ட்ராப்ஸ் இளைஞர்களை உள்ளடக்கிய சமூக நல அமைப்பாகும். இதன் நிறுவன தலைவராக அரவிந்த் ஜெயபால் உள்ளார் . ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ‘விருந்தாளி’ திட்டம், மாற்றுத் திறனாளிகளின் மனம் குளிர, மனச் சோர்வினை அகற்ற, கடற்கரையில் தற்காலிக நடைமேடை அமைத்து கடல் அலையில கால் நனைக்க ஏற்பாடு போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிகளுக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதுவருமான ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.
நம்முடைய சொந்தங்களை கவனிக்கத் தவறியதன் விளைவாகவே முதியோர் இல்லங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தக் கால இளைஞர்கள் எல்லாம் நல்ல பண்புகளுடன் இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதத்தில் இளைஞர்களை உள்ளடக்கிய ரெயின்ட்ராப்ஸ் சமூக நல அமைப்பு பல வியக்கத்தக்க சமூக பணிகளை செய்து வருகின்றன. ரெய்ன்ட்ராப்ஸ் சமூக நல அமைப்பு மற்றும் ரோட்டராக்ட் கிளப் ஆப் ஜென்நித் சார்பில் அம்பத்தூரில் அமைந்துள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கிராமிய கலைவிழா மற்றும் பொங்கல் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள், ராஜ மேளம் மற்றும் பறை இசை முழங்க விழா இனிதே துவங்கியது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய திண்பண்டங்களான தேன்மிட்டாய், கடலை உருண்டை, தேங்காய் மிட்டாய், பஞ்சுமிட்டாய், கமர்கட், கோலிசோடா, சுக்கு காபி, பணியாரம், பானகம், இளநீர் என தெகட்ட தெகட்ட இனிப்புடன் பழைய நினைவுகளை முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தி தந்தன. இந்த சிறப்பு மட்டுமல்லாது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, குடைராட்டிணம், மண்பானை செய்தல், கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம், குடிசை வீடு, என பாரம்பரிய நிகழ்வுகள் அத்தனையும் இருந்தன.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், இசை அமைப்பாளரும் ரெய்ன்ட்ராப்ஸ் சமூக நல அமைப்பின் நல்லிணக்க தூதுவருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல பின்னணி பாடகர்கள் வேல்முருகன், சின்னப்பொண்ணு, பம்பா பாக்கியா, ஷம்சுதீன், ரமணியம்மாள், அரவிந்த், ஹரிதா, கிருஷ்ணகுமார், ஜோதி மற்றும் இன்போலைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராமகிருஷ்ணன், ஆனந்தம் இல்ல நிர்வாகிகள் மற்றும் ரெய்ன்ட்ராப்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இதில் சிறப்பு நிகழ்வாக ஆனந்த இல்ல முதியோர்களுடன் இளைஞர்களும் இணைத்து பொங்கல் வைத்து கும்மி அடித்து மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாது வந்திருந்த அணைத்து விருந்தினர்களையும் பாரம்பரிய முறைப்படி பரிவட்டம் கட்டி மரியாதை செய்ததுடன் அவர்களுக்கு பொங்கலுக்கு தேவையான பாரம்பரிய அரிசி நாட்டுச்சக்கரையுடன் கூடிய அனைத்து பொருட்களும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.