சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி பேச தொடங்கினார். அவர் பேசி முடிப்பதற்குள் சபாநாயகர் தனபால் அவரை உட்கார சொன்னார். மேலும் அமைச்சர் பதில் அளிப்பார் என்றும் தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் முழுவதையும் பேச அனுமதிக்கும்படி வலியுறுத்தினார்கள். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார். ‘‘கடலில் எண்ணை கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் மீன்கள் செத்து மடியும் நிலை உருவாகி இருக்கிறது. மீனவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிலையை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து மத்திய அரசிடம் நேற்று தெரிவிக்கப்பட்டு விட்டது. துறைமுக தலைவரிடமும் அறிவுறுத்தப்பட்டது என்றார். அதன்பின்னர் கப்பல் விபத்து நடந்தது பற்றி பேசத் தொடங்கினார். உடனே தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணை கசிவை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பேசும்படி வற்புறுத்தினார்கள். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘‘ஒரு டன் குருடாயில் கடலில் கொட்டி கலந்தது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கையை துரிதப்படுத்த வற்புறுத்தப்பட்டது. அந்த கப்பல் இன்சூரன்சு செய்யப்பட்டிருப்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கு நஷ்ட ஈடும் பெற முடியும். எண்ணையை அகற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீரடையும்’’ என்றார்.