மோடி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டாதாக நாராயணசாமி பேச்சு

பண மதிப்பு நீக்கம் மக்கள் படும் வேதனை என்ற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார், ரகுமான்கான் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேசியதாவது, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழிலாளர்கள் விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் உள்பட எல்லா தரப்பினருமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தான் அதிக அளவு புழக்கத்தில் இருந்தது. அதை ஒழிக்கும் போது அதற்கு ஏற்றாற்போல் மாற்று நடவடிக்கை செய்யவில்லை. உற்பத்தி குறைவு, வேலையிண்மை போன்றவற்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து பெரிய அளவில் மக்கள் போராடவில்லையே என்கிறார்கள். அதற்கு காரணம் மோடி அரசு சர்வாதிகார அரசு. அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டும் அரசு, மக்கள் தங்கள் உணர்வுகளை வருகிற தேர்தலில் வெளிக்காட்டுவார்கள். வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் புதுவையில் 35 சதவீதம் வரி வசூல் குறைந்து உள்ளது. எங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அடிக்கடி வருவதற்கு காரணம் தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்படுகிறோம். கருத்து வேறுபாடுகளை எங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்கிறோம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள் மூலம் மிக கண்ணியமாக நடத்தப்பட்டது. புதுச்சேரியிலும் அதே போல் நடந்தது. நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்து வைத்தோம். தமிழ்நாட்டில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திருநாவுக்கரசர் பேசும் போது, “அனைத்து மாவட்டங்களிலும் பண மதிப்பு நீக்க பிரச்சினையை பொது மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய கட்சிகள் பலமாக இருப்பதற்கு காரணம் அடித்தளம் பலமாக இருக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு பல இடங்களில் கிளை அமைப்புகள் இல்லை. எனவே உறுப்பினர் சேர்க்கை, கிளை கமிட்டிகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார். கருத்தரங்கில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் சுதர்சன நாச்சியப்பன், ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை, நடிகை குஷ்பு, நாசே. ராமச்சந்திரன், கோபண்ணா, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன், தாம்பரம் சிவராமன், இரா.மனோகர் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், மாணிக் தாகூர், வில்லிவாக்கம் சுரேஷ், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், ஊர்வசி அமிர்தராஜ், இல.பாஸ்கர், தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருள் மீனாட்சி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் முருகேசன், காங்கிரஸ் கலைப்பிரிவு துணைத் தலைவர் ஐஸ் அவுஸ் தியாகு, நாசே. ராஜேஷ், நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.