ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை லட்சக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்துக்கு பணிந்த மத்திய-மாநில அரசுகள் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு மீதான தடைகளை நீக்கியுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாதபடி தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. என்றாலும் 23-ஆம் தேதி இளைஞர்கள் போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ்காரர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும், பெட்ரோல் வெடிகுண்டுகளையும் சிலர் வீசினர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தினர். இதனால், இருதரப்பினரும் படுகாயமடைந்தனர். மெரீனாவில் தொடங்கிய இந்த கலவரம் சென்னை மாநகரம் முழுவதும் பரவியது. போலீசார் மீது சிலர் கொடூர தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் வாகனங்கள், போலீஸ் நிலையம் ஆகியவைகளை தீ வைத்து எரித்தனர். வன்முறை சம்பவங்கள் குறித்து சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 280 பேர் கைதாகி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் போலீஸ்காரர் சண்முக குமார் என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல மேலும் பல போலீஸ்காரர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளில், பாலாஜி, ராமு, பத்தா என்ற பக்தன், பாக்கியலட்சுமி, சங்கர், சுகுமார் என்ற டெல்லி பாபு, பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சுகுமார், பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் குத்து சண்டை பயிற்சியாளர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் போலீசாரை கொடூரமாக தாக்கியதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்களை கொடூரமாக தாக்கி படுகாயத்தை ஏற்படுத்தியதாக கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், விக்னேஷ், வெங்ககேடஷ், கார்த்திக்குமார், திருநாவுக்கரசு, ராம்கி, சரவணன், முனுசாமி, பிரபாகரன், கண்ணன், லோகநாதன், நூர்ஜான், சூர்யா, ஜோஸ்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 22 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சைதாப்பேட்டை 9வது குற்றவியல் கோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிசங்கர் விசாரித்தார். பின்னர் அனைவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.சங்கர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘இந்த சம்பவங்களில் போலீஸ்காரர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல் முழுவதும் படுகாயம் உள்ளது. ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ்காரர்களை மனுதாரர்கள் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அனைவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.