லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “பெட்டிக்கடை” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்
கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ்
இசை – மரியா மனோகர்
பாடல்கள் – நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன், மறத்தமிழ் வேந்தன்
நடனம் – வின்செண்ட் ,விமல்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை – முருகன்
தயாரிப்பு மேற்பார்வை – செல்வம்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது…
விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமுத்திரகனி, வீரா இயக்குனர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர்,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பங்குபெற்றனர்.
விழாவில் பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன்
இது எனக்கு முதல் படம். முதல் படத்தில் அழுத்தமான ஒரு பதிவை பதிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தொட்டிருக்கிறேன். பெட்டிக்கடைக்கும் நமக்குமான தொடர்பு உணவு சங்கிலியாய் உறவு சங்கிலயாய் தொடர்கிறது. சூப்பர் மார்க்கெட் ,ஆன்லைன் என்கிற கார்ப்பரேட் மாயை எப்படி காலியாக்கி இருக்கிறது என்கிற கருத்தை இதில் பதிய வைத்திருக்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் மரியா மனோகர் பேசும் போது….
எனது இசையை பாரதிராஜா வெளியிடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்..இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஒரு நல்ல அழுத்தமான கதைக்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் பேசியதாவது…
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அதிக பாடல்களை எழுதியவன் நான் என்கிற பெருமையோடு சமூக சிந்தனையுள்ள சமுத்திரக்கனி சாருக்கும் பாட்டெழுதுகிறேன் என்கிற பெருமை எனக்கு என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும் போது….
பெட்டிக்கடை, புரட்சியை பேசும் படம்…இசக்கி கார்வண்ணன் முதல் படத்திலேயே முத்திரை பதிக்கப் போகிறார் என்றார்.
இது ஒரு நல்ல தருணம்..நாம் கடந்து வந்த விஷயம் .. நாம் வேண்டாம்ன்னு விட்டுட்டு வந்த விஷயத்தையும் இதில் சொல்லி இருக்காங்க…இது அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும்… அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்கிற கதையையும் இதில் சொல்லி இருக்கார் இயக்குனர்.
இந்த டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே அது மாதிரி தான். திடீரென்று ஒரு நாள் வந்து சர்க்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்… அவங்க சர்க்காரைப் பற்றி சொல்றாங்க… நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம். ஒரே தேதில ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேணாம்..நமக்குன்னு ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன் அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை. இவ்வாறு சமுத்திரகனி பேசினார்..
விழாவில் பேசிய பாரதிராஜா, “பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமுக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூகவிரோதி” என்றார் இயக்குநர் பாரதிராஜா. “இந்தப்படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிடவும் அவர் தவறவில்லை.
இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு… பாட்டே இப்படி இருக்கும் போது படம் எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன்… அற்புதமாகவே இருக்கும்னு சொல்வேன்…
இந்த படத்துல நடிச்ச ஹீரோ அப்படியே மண்வாசனை முகம்…தமிழன் இப்படித்தான் இருப்பான்..
என் படத்து ஹீரோக்கள் எல்லோருமே நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற முகமாத் தான் இருப்பாங்க..
மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது…
ஏதாவது நல்ல விஷயத்தை பேசினாலே சமூக விரோதியாக்கப் பட்டு விடுகிறார்கள்…
இந்த இயக்குனர் பெட்டிக்கடை- without GST என்று வைத்திருக்கிறார்…இவருக்கும் பிரச்சனை வரலாம் …போராடித்தான் ஆக வேண்டும்
இல்லை என்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம்..
தமிழை இழந்து விடுவோம்..நம் மண்ணை இழந்து விடுவோம்… ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம்…
இந்த படம் இசக்கி கார்வண்ணன், சமுத்திரகனி, வீரா, மரியா மனோகர், மறத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித்தரும்.இவ்வாறு பாரதிராஜா பேசி இசையை வெளியிட்டார்.