நாகை மாவட்டம் பூம்புகாரில் வெளிநாடு வாழ் வலைதள இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர் களிடம் கூறியதாவது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி தமிழர்களின் பண்டைய வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டை மீட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்பாடுகளால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், விவசாயிகள் நலனுக்காக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும். ஆண்டுதோறும் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசி, பருப்பு, உளுந்து, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் நம் நாட்டில் விளையும் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். விவசாயம் பாதிக்கப் பட்டதால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும். வருங்காலங்களில் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். வருங்காலத்தில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் விவசாய சங்கங்கள் தனித்தனியாக இயங்குவதால்தான் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை. விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் சுமார் 1.25 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்துள்ளனர். இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.