நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் தனுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா. அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது. பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார். பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை. கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது. ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது. தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார். இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு. ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.