நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தைப்பார்த்த பின் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், “இன்றைக்கு ஒரு பொறுப்பான தலைமுறையை பார்க்க முடிகிறது. இந்தப்படத்தைப் பற்றி இதன் இயக்குநர் என்னிடம் சொல்லும் போது படத்தை பார்க்க ஆவல் கொண்டேன். படத்தின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஜி.வி.பிரகாஷ், இளன், கதிர் போன்ற இளம் படைப்பாளிகள் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல் இக்குறும்படத்தின் இயக்குநர் பேசும்போது சொன்னார், நான் திருமுருகன் காந்தி அவர்களைப் பார்த்து தான் புத்தகங்கள் வாசிக்க கற்றுக்கொள்கிறேன். என்று. அது பெரிய சந்தோஷம். எனக்கும் திருமுருகன் காந்தி தான் பெரிய இன்ஷ்பிரேஷன்’ என்றார்.
நடிகர் கதிர் பேசும்போது, “இந்தப்படத்தின் வெற்றியை நான் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக பார்க்கிறேன். இந்த கான்செப்டை கையில் எடுத்தபோதே இயக்குநர் ஸ்ரீராம் வெற்றி பெற்று விட்டார். இந்தவிழாவிற்கு வந்ததிற்கு நான் மிகவும் பெருமைப்படுறேன். திருமுருகன் காந்தி சார் பக்கத்தில் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவர் பேசும் காணொளிகள் தான் இன்றைய இளைஞர்களுக்கு பல உண்மைகளை விளக்குகிறது. திருமுருகன் காந்தி போன்றவர்கள் தொடர்ந்து இதுபோல செயலாற்றுவது அவசியம். இந்த குறும்படம் நிச்சயம் பல விவாதங்களை முன்னெடுக்கும்” என்றார்.
ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, அநீதி குறும்படம் ரொம்ப முக்கியமான படம். இந்தப்படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவை பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.
திருமுருகன் காந்தி பேசுகையில், “இங்கு இருக்கும் அனைவரையுமே தோழர்களாக தான் பார்க்கிறேன். இந்தக்குறும்படம் விருதுகள் வாங்கியதற்காக நான் வரவில்லை. இந்தப்படத்தின் கதை தாங்கி நின்ற துயரம் நம் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் வந்த ஒருகாட்சி, “காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில் தமிழன்டா என்ற பனியன் போட்டிருந்த பையன் மீது விழுகிறது. இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது. அனிதாவின் மரணத்தின் போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக கைதாகி இருந்த கைதிகள் ஒன்றுகூடி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்கு பாதிக்க செய்த சம்பவம் அது.
ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கை கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளை பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.
இயக்குனர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் பேசும்போது, ‘நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்துதான், இந்த படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்த படம் பற்றி திருமுருகன் காந்தியிடம் பேச சென்றபோதுதான், அவர் கைதானார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு பேருக்கு மிகவும் நன்றி’ என்றார்.
அநீதி குறும்படம் பெற்ற விருதுகள்
சிறந்த படம் – 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது
சிறந்த படம் – லேக் வியூ இண்டர்நேஷனல் பிலிம் விருது
சிறந்த படம் – கொல்கத்தா இண்டர்நேஷனல் கல்ட் பிலிம் விருது
சிறந்த அறிமுக இயக்குனர் – கொல்கத்தா இண்டர்நேஷனல் பிலிம் விருது
8வது தாதா சாயிப் பால்கே ஜூரி விருது
சிறந்த திரைக்கதை – 7வது பெங்களூரு பிலிம் விருது
சிறந்த நடிகர் – டீகடை சினிமா விருது
சிறந்த படம், (சிறப்பு விருது) – 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது
1. Best film award -5th Noida International Film Festival,
2. Best film award-Lake View International Film Festival ,
3. Best film award- Calcutta International Cult Film Festival,
4. Best debut director – Calcutta International Film Festival,
5. Honourable Jury Mention – 8th Dada Saheb Phalke Film Festival,
6. Best Screenplay Award – 7th Bangalore Shors Film Festival
7. Best Actor – Teakadai Cinema Awards,
8. Special Festival Mention – 5th Noida International Film Festival