இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாகியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து தொடரை முதன்முதலாக சந்தித்தது. புனேவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்தபோது, விராட் கோலியும் ஜெயந்த் ஜாதவும் சேர்ந்து இந்திய அணியை மீட்டனர். 351 ரன்களை இந்திய அணியால் சேஸிங் செய்ய இயலாது என்று நினைத்த வேளையில் விராட் கோலி 134 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். கேப்டனாக தனது பொறுப்பை திறம்பட செய்த அவர், தனது உடலையும் நல்ல முறையில் பராமரித்து வருகிறார். இதனால் விராட் கோலியை வாசிம் அக்ரம், சக்லைன் முஸ்தாக் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசகராக செயல்படும் சக்லைன் முஸ்தாக் கூறும்போது, ‘‘உடற்பயிற்சி கூடத்திற்கு உள்ளே என்றாலும், வெளியே என்றாலும் விராட் கோலி ‘மிகவும் ஆற்றல் வாய்ந்த மனிதர் (most energetic person)’, அவரது தூக்கம், சாப்பாடு போன்றவற்றில் சிறந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்’’ என்றார். வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘விராட் கோலி மற்றும் இளம் வீரர்கள் மூத்த வீரர்களை அணுகி ஆட்ட நுணுக்கங்களை கேட்டறிவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இளம் வீரர்கள் பேட்டிங் ஆலோசனைக்காக எப்போதும் கவாஸ்கரை அணுகுகிறார்கள். அவரும் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குகினார். பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு செய்யவில்லை. அவர்கள் மூத்த வீரர்களை அணுகி ஆலோசனை கேட்க தயங்குகிறார்கள். அதேபோல் உடற்தகுதியிலும் சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் விராட் கோலி மற்றும் மற்ற இந்திய வீரர்களை பின்பிற்ற வேண்டும்’’ என்றார். இதேபோல் சோயிப் அக்தரும் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார்.