இயக்குனர்களுக்கு நன்றி கூறிய இளம் நடிகர்

“மெட்ராஸ்”, ” கபாலி” என இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இளம் நடிகர் “ஜானி” ஹரி. “மெட்ராஸ்” திரைப்படத்தில் இவர் நடித்த “ஜானி” கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்களால் அறியப்படும் ஹரி, அடுத்தடுத்து “பரியேறும் பெருமாள்”, ” வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” ஆகிய திரைப்படங்களின் மூலம் பரபரப்பான நடிகராகி இருக்கிறார்.

தான் நடித்திருக்கும் மூன்று பெரிய படங்களும் வரிசையாக வெளியாகி இருக்கும் உற்சாகத்தில் இருக்கும் ஹரி, தனது அனுபவத்தைக் கூறும்போது,

“இந்த வருசம் நிஜமாவே எனக்கு சூப்பரான வருசம். இடையில் இரண்டு வருசம் பெரிய இடைவெளி இருந்தது. அதை மறக்கடிக்கும் வகையில் ” அண்ணனுக்கு ஜே”, “பரியேறும் பெருமாள்”, “வட சென்னை” மற்றும் “சண்டக்கோழி 2” என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. சொல்லப்போனா “பரியேறும் பெருமாள்” நடிப்பதற்கு முன்னாடியே “வட சென்னை”, ” சண்டக்கோழி 2″ படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நான்கு படங்களுமே வெவ்வேறு களம், வெவ்வேறு ஜானர்.. அதனால் இந்த படங்களில் வேலை செய்தது நல்ல அனுபவமா இருந்தது. இவ்வளவு பெரிய படங்களில் ஒரு முக்கியமான ரோல் கிடைக்கிறதெல்லாம் சாதாரணமான விசயமில்லை. இவை அனைத்திற்கும் காரணம் “ஜானி” தான். “ஜானி” மூலமாகத் தான் எனக்கு இங்கே வெளிச்சம் கிடைத்தது. அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு என் முதல நன்றி. மேலும், எனக்கு இவ்வளவு பெரிய வாப்பினை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் எனது நன்றிகள்” என்று கூறினார்.