மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும் ’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால்.. வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.
தற்போது சரித்திர பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை திரைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா பாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். உத்தம வில்லன் படத்தில் சிறிய பகுதியில் இது போன்று நடித்திருக்கிறேன். ஆனாலும் முழு நீள சரித்திர பின்னணியிலான கதையில் குறிப்பாக வீரமங்கை ஜான்சி ராணியின் கதையில், நடிக்க விரும்புகிறேன்.
திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் ‘மீடூ ’ ஹேஸ்டேக் என்ற இணையப்பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். இது சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதற்காக நேர்மறையான எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி.
தற்போது நெட்பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விஸிபிள் மாஸ்க் ’ என்ற ஹிந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். இதில் என்னுடன் ஆதீத்யா ஷீல் என்னும் இளம் நடிகர் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அத்துடன் இந்தி மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகலாம் என்றும் நம்புகிறேன். இதில் நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். வருவாய் பற்றாக்குறையினால் வேலைக்கு செல்கிறேன். அங்கு எனக்கு ஏற்படும் அனுபவங்களும், கணவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் என இன்றைய நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினையை இயக்குநர் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். அத்துடன் ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் குஞ்சாலி மராக்கரின் சுயசரிதையில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.
திரையுலகில் ஏராளமான இளம் படைப்பாளிகள் அறிமுகமாகி வீரியமான படைப்புகளை வழங்கி, மக்களின் ரசனையை மேம்படுத்தி வருகிறார்கள். எனக்கேற்ற கேரக்டர் இருந்து, திரைக்கதையும் என்னை ஆச்சரியப்படுத்தினால் அவர்களுடனும் இணைந்து பணியாற்ற தயாராகவேயிருக்கிறேன். ’ என்கிறார் நடிகை பூஜா குமார்.
இவர் ‘காதல் ரோஜாவே ’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும். விஸ்வரூபம், உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பதும், அதனைத் தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.