அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் நடிக்கும் வைபவ்

ஒரு நடிகரிடம் அப்பாவியான முகம் இருந்தாலே அது அவருக்கு மிகப்பெரிய சொத்து. ரசிகர்களை மிக எளிதாக கவரக்கூடிய தன்மை அதற்கு உண்டு. எல்லா வகை படங்களில் நடிக்கவும் அது உதவும். அதிர்ஷ்டவசமாக நடிகர் வைபவ் இந்த குணநலன்களை பெற்றிருக்கிறார். அதனால் தான் அது பேய் படமாக இருந்தாலும், ஹாரர் காமெடி படமாக இருந்தாலும் அல்லது ரொமாண்டிக் காமெடி படமாக இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கிறார். வால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் வைபவ். திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் சாச்சியும், வைபவ் பற்றி அவ்வாறே நல்ல விஷயங்களை கூறுகிறார்.

இது பற்றி அவர் கூறும்போது, “எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்பது, அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்தாலே இது தெரியும்” என்றார்.

மேலும், “வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ஒன்றும் வித்தியாசமான திரைப்படம் அல்ல. என் படத்திலும் ஒரு நாயகன், ஒரு நாயகி மற்றும் ஒரு வில்லன். நாயகம் ஒரு நடுத்தர வர்க்கவர்க்கத்தை சார்ந்தவர், எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை. இதை கேட்கும் போது அரைச்ச மாவையே அரைக்கின்ற உணர்வு எழலாம். ஆனால், அதை படமாக்கிய விதம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இயக்குனர் அவதாரம் எடுக்க, சரியான தயாரிப்பு நிறுவனத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன், காத்திருப்புக்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது” என்றார்.

வைபவ்வை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்த இயக்குனர் சாச்சியின் கணிப்பு மிகவும் சரியானது. ஏனெனில் ரசிகர்கள் அனைவருக்கும் வைபவ்வின் அப்பாவித்தனமான தோற்றமும் அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும், அவையே படத்தில் அவரது கதாபாத்திரத்தை மேலும் மெறுகேற்றுகிறது. அந்த வகையில் இந்த படம் சரியான பாதையை நோக்கி செல்கிறது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.