பிரதமர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாமக அன்புமணி கைது

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கோரி பிரதமர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பாமக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுகுறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திக்க மறுத்ததைக் கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் முன் போராட்டம் நடத்திய பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி துக்ளக் சாலை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ஆம் தேதி அன்று பாமக சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு அமைதியாக நடத்தப்படும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.