உலகில் முதல் முறையாக ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’, இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார், இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம். இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படத்தை உலகெங்கும் திரையிட முயற்சிகள் நடந்துவரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் ‘ஈவென்ட் சினிமா’ எனும் திரையரங்க நிர்வாகத்தினர் எதிர்வரும் 11 ஆம் மாதம் (நவம்பர்) ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடுவது போலவே ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தையும் அவர்களாகவே திரையிட முன்வந்துள்ளனர். இதனால் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இனத்தவரும் இப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோவை விநியோகஸ்தராகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்திலும் மற்றைய திரைப்படங்களையும் ‘ஈவென்ட் சினிமா’ மூலமாக திரையிடும் அந்தஸ்து ஈழன் இளங்கோவின் ‘அம்மா படைப்பகம்’ நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே பார்க்கப்படுகிறது.

அண்மையில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி சென்னையில் பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கவிஞர் சினேகன், தோழர் தியாகு, தந்தை ஜகர் காஸ்பெர், திரைப்பட இயக்குநர்கள் மீரா கதிரவன், தங்கசாமி, நடிகர் சௌந்தர்ராஜா, தமிழ் ஆர்வலர் கம்பம் குனாஜி, மற்றும் பல பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். அநேகமானவர்கள் கருத்துக்களும், நேர்த்தியான திரைக்கதை , ஆழமான, அழகான கதை, காலத்திற்கு அவசியமான திரைப்படம் என்றும், நடித்தவர்கள் இயல்பாக, இயற்கையாக எதார்த்தமாக நடித்திருந்தார்கள் என்றும், அடுத்த காட்சி என்னவரும் என்பது போய் அடுத்த வசனமும் வரியும் என்ன வரப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டது என்றும், திரைப்பட வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்ற முன்னோட்டக் காட்சிக்கும் பல முக்கிய பிரமுகர்கள் வந்து திரைப்படத்தை கண்டு களித்து வாழ்த்தினர். பாலச்சந்திரன், இசைப்பிரியா என்றதும், ஈழத்து இறுதிப்போரின் போது நடைபெற்ற காட்சிகளை திரையில் காணும் மனபலம் இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்தில் வந்த எங்களுக்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்றும், இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைவடிவு சாயலில் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ இருக்கிறது என்றும், இது ஒரு வரலாற்று பதிவு என்றும், நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துக்கூறினர்.

விரைவில் உலகெங்கும் பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.