இன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள் . நோயைக் குணப்படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது. சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளுக்கு அடிமைப்படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம் .குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது.அப்படிப்பட்ட மருந்துகளில் எவ்வளவோ தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்கள் உள்ளன.ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை.இந்த உண்மையை உலகுக்கு சொல்ல வரும் படம்தான் ‘ஒளடதம் ‘.
இப்படத்தை தனது ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு. சமைரா நாயகியாக நடித்துள்ளார் . மற்றும் வினாயக்ராஜ், பாலாம்பிகா, முரளி, சந்தோஷ் ஆகியோரும் நடிதுள்ளனர். திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ், இசை இசையரசர் வி.தஷி. சண்டைப் பயிற்சி தேவா, டிசைன்ஸ் உதயா, படம் பற்றி நேதாஜி பிரபு கூறுகையில் ,” நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை, வந்து விட்டேன். ஆனால் வழக்கமான படமாக நாமும் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். உண்மைச்சசம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கை வழிகளில் உண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள் ஒளடதம் குறை, ஒளடதம் தவிர் என்றார்கள்.
அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். ‘ஒளடதம் ‘ என்கிற பெயரில் மருத்துவம் பற்றி எடுக்க ஒரு கதை தேடினேன். அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013 மே14 ல் வந்திருந்தது.
இது பற்றி 2016 ஆண்டிலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்த்தேன். தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம் இன்னும் கேட்பாரில்லாமல்
தொடரவே செய்கிறது. இது பற்றிப்படம் பேசுகிறது. படம் ஒரு கமர்சியல் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்காக ஒரு நிஜமான மருந்துக்கம்பெனியில் 8 நாட்கள் படப்பிடிப்புநடத்தியுள்ளோம்.” என்கிறார்.
படம் பற்றிய விளம்பரத்தை வித்தியாசமாகச்செய்யயவுள்ளாராம். அதைப் பற்றிப்பேசும் போது, “இப்போது எவ்வளவோ படங்கள் வருகின்றன. ஆனால் அது நல்ல படம் என்று தெரிவதற்குள் சரியான திரையீடு அமையாமல் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. நான் ஒரு திட்டத்தில் உள்ளேன். திரையரங்கு திரையரங்காகச்சென்று ’ஔடதம்’ என எழுதப்பட்ட பேனாக்களை ரசிகர்களைச்சந்தித்து வழங்கப்போகிறேன். இப்படி ஒவ்வொரு திரையரங்காகச்சென்று 5000 பேனாக்கள் வீதம் 3 லட்சம் பேனாக்களைத் தரப்போகிறேன்.
இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்பை ஏற்படுத்தும்.” என்கிறார்,நேதாஜி பிரபு. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைகளில். டிரைலர் மற்றும் ‘ஔடதம்’ 3லட்சம் பேனா க்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் இறுதியல் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.