இடைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘பூமராங்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.
“சரியான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துக்கு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டுவது என்பது ஒரு வழக்கமான முன்னுதாரணம் ஆகும். ஆனால் என்னை பொறுத்தவரை, ‘பூமராங்’ படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது” என்றார்.
நடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, “அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன். படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.
இயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இந்த பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே. செல்வா எடிட்டிங்கை கையாள்கிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.