புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.
கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.
அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.
மேலும், “கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.
ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, “மேயாதமான்” படத்தின் “தங்கச்சி” பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை, “பிச்சைக்காரன்” படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை “மரகத நாணயம்” படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.