பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வெல்வதில் ஸ்பெயினின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் தீவிரமாக உள்ளார்.பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் களிமண் தரையில் அதிக சாம்பியன் பட்டங்கள் (49) வென்றவரான கில்லர்மோ விலாஸின் சாதனையை நடால் சமன் செய்வார்.பார்சிலோனா ஓபனில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், கடந்த இரண்டு ஆண்டுகளிலும் தோல்வியடைந்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் போட்டியிலுமே பட்டம் வெல்லாத நடால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் ஆனார். இந்தப் போட்டியில் அவர் வென்ற 9-ஆவது பட்டம் இது. இதன்மூலம் புதிய உத்வேகம் பெற்றிருக்கும் அவர், டென்னிஸ் உலகில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகள் எனக்கு மோசமானவையாக அமைந்தன. ஆனால் இந்த சீசனுக்காக சிறப்பாக தயாராகியிருக்கிறேன்.மான்டி கார்லோ போட்டியில் வென்ற பட்டம், அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடுவதற்கு உதவும் என நம்புகிறேன். கடந்த போட்டிகள் அனைத்துமே எனக்கு கடினமானவையாக அமைந்தன. நானும் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் என்றார்.