பொறுக்கிஸ் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் எடுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.
நமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.
முன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.