டி காக் அதிரடி ஆட்டத்தால் தோல்வி அடைந்தோம்: விராட் கோலி பேட்டி

quinton-de-kock-break-virat-kohliஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான மோதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி (79 ரன்), டிவில்லியர்ஸ் (55 ரன்) ஆகியோரின் அரைசதம் உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை டெல்லி அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

நடப்பு சீசனில் முதல் சதத்தை அடித்த குயின்டான் டி காக் 108 ரன்களும் (51 பந்து, 15 பவுண்டரி, 3 சிக்சர்), கருண் நாயர் 54 ரன்களும் திரட்டி டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பெங்களூருக்கு எதிராக தொடர்ந்து 8 தோல்விகளுக்கு பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி வசப்படுத்திய முதல் வெற்றி இதுவாகும். அத்துடன் இலக்கை துரத்திப்பிடித்ததில் (சேசிங்) டெல்லி அணியின் அதிகபட்ச ‘சேசிங்’காகவும் இது அமைந்தது.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்களூரு ஸ்டேடியத்தில் 1,653 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக ரன் எடுத்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.தோல்விக்கு பிறகு கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்பார்த்ததை விட நாங்கள் 50 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இறுதி கட்டத்தில் டெல்லி பவுலர்கள், பீல்டிங் வியூகத்துக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். நான் இன்னும் 15 பந்துகள் கூடுதலாக சந்தித்து இருந்தால் 215 ரன்களை எடுத்திருக்கலாம்.

ஆனால் டெல்லி அணி வீரர்கள் பேட்டிங் செய்த விதத்துக்கே எல்லா பெருமையையும் வழங்க வேண்டும். குறிப்பாக குயின்டான் டி காக்கின் இன்னிங்ஸ் அற்புதம். அவர் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்ட விதம் அருமை. அவர் அபாரமாக ஆடி வெற்றியை எங்களிடம் இருந்து தட்டிப் பறித்து விட்டார். குயின்டான் டி காக் தரம் வாய்ந்த ஒரு வீரர். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகவும் அபாயகரமானவர்.

சில ஆட்டங்களில் கிறிஸ் கெய்ல் (1, 0) சரியாக ஆடாதது குறித்து கேட்கிறீர்கள். இந்த தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் அவர் ரன் குவிப்பில் மிரட்டுவார். எங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் சமயத்தில் அனேகமாக அவர் சதம் கூட அடிக்கலாம். கிறிஸ் கெய்லின் ஆட்டத்திறன் (பார்ம்) குறித்து நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை. ஏனெனில் மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடுகிறார்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை சில வீரர்கள் சோபிக்க தவறும் போது, மற்ற வீரர்கள் அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்வதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் நிறைய பெருமை சேர்த்து வருகிறார். அவர் எங்கள் அணியின் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். 20 ஓவர் கிரிக்கெட்டில் மகத்தான திறமைசாலி. அதனால் ஒவ்வொரு முறை அவர் களம் இறங்கும் போதும் ரசிகர்கள் அவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எல்லா வகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து அவர் இதுவரை 17 சதங்கள் அடித்திருக்கிறார். இது ஒன்றும் ‘ஜோக்’ அல்ல. எனவே அவர் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. அவரும் அந்த எதிர்பார்ப்பை தக்க வைக்கத்தான் விரும்புகிறார்.என கூறினார்.