சமண மதத்தின் 24-வது தீர்த்தரங்கரர் மஹாவீரரின் பிறந்தநாளை, சமணர்கள் புனிதநாளாகக் கொண்டாடுகிறார்கள். மஹாவீரர் பிறந்த ஆண்டு குறித்து ஸ்வேதம்பரர்கள், திகம்பரர்கள் ஆகிய சமண மதத்தின் இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் பிறந்த தினத்தை இருவரும் சேர்ந்தே கொண்டாடுவார்கள். அவரது பிறந்தநாளன்று பலவிதமான ஊர்வலங்களும் வழிபாடும் நடைபெறும்.
மஹாவீரர் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் பிறப்பதற்கான நற்செயல்கள் தென்பட்டன. தெய்வீகக் குழந்தை அவதரிக்கப்போகிறது என்பதை உணர்த்தும்விதமாக நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை பரவியது. நாடெங்கும் வளமும் நலமும் செழித்தோங்கியது. மஹாவீரரை வயிற்றில் சுமந்துகொண்டு இருக்கும்போது அவருடைய தாய்க்கு வெள்ளை யானை, துள்ளும் மீன்கள், தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பரப்பு, பூமாலை, வெள்ளை எருது, அமைதியான பாற்கடல் போன்ற நிறைவைக் குறிக்கும் கனவுகள் தோன்றின என நம்பப்படுகிறது.சுமார் 2600 ஆண்டுகளாக அவரது ஒவ்வொரு பிறந்தநாளையும் ஜைன சமூகத்தினர் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில், 19-4-2016 ஆகிய இன்றும் மஹாவீரரின் பிறந்தநாள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.