இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை ‘மரகதக்காடு’ இயக்குநர்

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். 
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.
நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. ‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது. 
இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார். வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன்.
பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். 
இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.
காடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும். ஒன்றை அழித்து இன்னொன்று  வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால்  எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.  சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை. இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது. 
ஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை. ஒரு திட்டத்தால் யாருக்கு எவ்வளவு வருமானம்  என்ற வியாபாரம் நோக்கம் சார்ந்து செயல்படக்கூடாது.
அரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள். பசுமைக் காடுகளை வெட்டி பசுமை வழிச்சாலை.. அமைப்பதா.. ?
அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்களின் பை நிரம்பினால் போதும் மக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன? என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது. தண்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும். 
இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக  காட்டுகிறது. 
இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது. “என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்…
உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்?”  என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை “மரகதக்காடு” படத்தில் பதிவு செய்துளேன். காட்டை அழித்து மலையைத் தகர்த்து பூமிக்கு அடியில் உள்ள மரகதத்தை தேடாதீர்கள். 
நம் கண்களுக்கு முன்னால் தெரியும் ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான். மரக்கத்தக்காடு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தானும் ஒவ்வொரு மரமாவது வைக்கவேண்டும். வீடு என் சொத்து.. மரம் நாட்டுக்கு சொத்து என்கின்ற உணர்வை இந்த படம் நிச்சயம் ஏற்படுத்தும். 
தண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம்.. இன்று வீடு தோறும் தண்ணீர் கேண்கள். அடுத்ததாக, சென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு. 6 லிட்டர் ஆக்ஸிஜன் 645 ரூ. பிளிப்கார்டில் விற்கிறாங்க. இப்பவும் கோபம் வரலைன்னா.. வரும் தலைமுறை நம்மை மன்னிக்காது.
அதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த  தார்மீகக்  கோபத்தை என் படம் உருவாக்கும். 8 வழிச் சாலையை எதிர்க்கும் மக்களாகட்டும் சமூக ஆர்வலர்களாகட்டும் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்… அப்படியிருக்கும்போது தைரியமாக எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறீர்களே?? என்றால் இயக்குநர் மங்களேஸ்வரன், 
வளர்ச்சித் திட்டங்கள் ஒன்று  மக்களை பாதிக்காதவை இரண்டு, மக்களை, இயற்கையை, கனிம வளங்களை பாதிப்பவை என்று பிரிக்கலாம்.இதில் 8 வழிச்சாலை மக்களை .. அவர்களின் உணவு ஆதாரத்தை .. இயற்கையை அதன் கனிம வளங்களை சூறையாடிவிட்டு… ஆண்டுக்கணக்கில் வேர்விட்டிருக்கும் மரங்களை வேரோடு பிடுங்கிவிட்டு வளர்ச்சிப் பணி என்று பெயரிட்டுக்கொள்வது இந்நாட்டின் எதிர்காலத்தை அந்த மண்ணின் வளத்தை அழித்துவிட்டுச் செய்யும் அரசாங்கத்தின்  சுயநலமான வளர்ச்சித்திட்டம் என்றே சொல்வேன். 
ஒரு அரசாங்கத்தின் ஆயுள் 5 வருடம்தான். ஆனால் அவர்கள் நாம் சிறுபிள்ளையிலிருந்து பார்த்து பேணிவரும் வளங்களை எடுக்கும்போது.. மக்களதிகாரத்திற்குட்பட்டே வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அங்குள்ள எந்த மக்களும் 8 வழிச்சாலைக்காக தவம் இருக்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே ஓலமிடுகிறார்கள்.
வளத்தை தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறார்கள். அதை அடக்கு முறையால் செயல்படுத்தத் துடிக்கும் அரசு மக்களுக்கானதாக இருக்க முடியாது. இம்மண்ணின் வளங்களை காப்பாற்றும் அரசாக இருக்க முடியாது. நான் எடுத்துவைத்திருக்கும் படம் இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம். 
இந்த திட்டத்தை நான் எதிர்க்காவிட்டால் என் படத்திற்கே துரோகம் செய்வது போலாகிவிடும்.  மண்ணின் வளங்களை பாதிக்காத திட்டங்களை கொண்டுவரும்போது அரசைக் கொண்டாடத்தானே செய்கிறோம்? படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் “மரகதக்காடு” படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை”.
செப்டம்பரில் படம் வெளியாக இருக்கிறது… படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும் அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும் என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன் .
தொழில் நுட்பக் கலைஞர்கள்: 
நடிகர்கள் : 
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ,  இலியாஸ் காத்தவன், ‘அறம்’ ராமச்சந்திரன், மணிமாறன், பாபா லக்ஷ்மண், வெஞ்சாரமோடு மோகன், ராஜு மோகன், ரமேஷ்
ஒளிப்பதிவு: நட்சத்திர பிரகாஷ்
எடிட்டிங்: சாபு ஜோசப்
சண்டைப் பயிற்சி : மிராக்கிள் மைக்கேல்
கலை இயக்குநர்: மார்டின் டைட்டஸ்
நடன இயக்குநர்: ஜாய் மதி
இசை : ஜெயப்பிரகாஷ் 
பாடலாசிரியர்கள்: விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன்
காஸ்ட்யூம் டிஸைனர்: செல்வம்
விளம்பர வடிவமைப்பு: கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் மணிகண்டன் 
பி.ஆர்.ஓ : A. ஜான்
தயாரிப்பு: கே.  ரகு நாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்)
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
மங்களேஸ்வரன்