தி.மு.கவின் தலைவராக 50 ஆண்டுகளை கடந்து சாதனைப்படைத்த மு.கருணாநிதி, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாவார். அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு கோபாலபுரம் இல்லத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக அவர் அன்று இரவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆழ்வார்பேட்டையில் தி.மு.க தொண்டர்கள் குவிய தொடங்கினர். தொடர்ந்து தங்கள் தலைவரை போற்றி கோஷம் எழுப்பி வந்த அவர்கள், நேற்று கொட்டும் மழையிலும் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. பின்னர் நேற்று 8 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகின.
அப்போதில் இருந்து, தொண்டர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் அவர் உடல்நிலை முன்பை விட மோசமாகிவிட்டதாக வந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருணாநிதியின் நிலை என்ன? என்று அறியாத தொண்டர்கள் மருத்துவமனையில் வெளியே அழுகுரலில் கூச்சலிட தொடங்கினர். பின் மருத்துவமனை சார்பில் அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியானது. இருந்தும் தொண்டர்கள் யாரும் அங்கிருந்து செல்லவில்லை. மேலும், ‘எழுந்து வா… தலைவா… எழுந்து வா…” என கோஷம் எழுப்ப தொடங்கினர். அறிக்கை வெளியான பிறகு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.