அசல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம்சிறை

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும், அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3-ன் படி  வைத்திருக்கமால் பொது இடங்களில் வாகனம் ஓட்ட அனுமதி கிடையாது என்றும், சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் ஓட்டுநர் உரிமத்தை ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காமல் வாகனம் ஓட்டுபவர்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.