‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.பெரும்பாலும் எந்த விழாக்களிலும் அவ்வளவாக தலைகாட்டாத நகைச்சுவை நடிகர் மனோபாலா மழையையும் பொருட்படுத்தாது இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
முத்தாய்ப்பாக பேசவந்த இயக்குநர் ராகேஷ்,
“எத்தனையோ போராட்ட செய்திகள் புதுசு புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும் நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள் தான். அதுதான் இந்தப்படத்தை எடுக்க என்னை தூண்டுச்சு.
நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியா நடந்துபோனா அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா சொன்னார்.. ஆனா இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே.. இதை சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம்..
என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடத்துக்குப்பின் இந்தப்படம் கிடைத்துள்ளது. (மேடையிலேயே அழுதுவிட்டார்) பின் இயக்குநர் மனோபாலா வந்து தேற்ற தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
அதற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது. இந்தப்படத்தின் கதாநாயகனாக துருவா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓடிவந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப்போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தை தூக்க வேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.
அவர் கீழே விழுந்ததும் நான் கட் சொல்ல முயற்சிக்க, ஒளிப்பதிவாளர் முத்தையா குறுக்கிட்டுஎன்னை தடுத்துவிட்டார். அதனாலேயே அந்தக்காட்சி ரொம்ப இயல்பாக வந்துவிட்டது. எடிட்டர் ஷான் லோகேஷ் கூட எப்படி இந்தக் காட்சியை தத்ரூபமாக படமாக்கினீர்கள் என வியந்தார்.. நான் ஒன்னு சொன்னேன்.. அதை அவங்க சரியா செய்யாததால், அந்த காட்சி கரெக்ட்டா வந்துருச்சுன்னு அவர்கிட்டே சொன்னேன்” என படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்தவர், அப்படியே சென்சார் மேட்டருக்கு தாவினார்.
“சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் எனப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியை சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள்.
பெண்கள் எந்தவிதமாகவெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்த காட்சிகளை பார்த்துவிட்டு, நீங்களே செயின் அறுக்கும் வழிகளை சொல்லிக்கொடுக்கிறீர்களா என கேட்கிறார்கள்.
நானும் திரைப்படக் கல்லூரியில் படித்தவன் தான். அதில் சென்சார் என்கிற ஒரு பாடமே இருக்கிறது. உங்களுக்கு சென்சார் ரூல் தெரியுமா என என்னை கேட்ட அதிகாரியிடம் அதை படிச்சுட்டு வந்தீங்கன்னா நீங்க டைரக்டர் ஆகியிருக்க வேண்டியது தானே சார்னு திருப்பிக் கேட்டேன். இதை சொன்னதுக்குத்தான் சான்றிதழ் தரமுடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க.. அதுக்குப்புறம் போராட்டம் பண்ணி, அந்த டீம் மாறிய பின்னாடி ஒருவழியா சான்றிதழ் வாங்கினோம்” என்கிறார்.